பாரதியார் பாடல்கள்

பாரத சமுதாயம்


ராகம்-பியாக் தாளம்-திஸ்ர ஏகதாளம்

பல்லவி

பாரத சமுதாயம் வாழ்கவே!-வாழ்க வாழ்க!
பாரத சமுதாயம் வாழ்கவே!-ஜய ஜய ஜய (பாரத)

அனுபல்லவி

முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை
ஒப்பி லாத சமுதாயம்
உலகத் துக்கொரு புதுமை-வாழ்க (பாரத)

சரணங்கள்

1. மனித ருணவை மனிதர் பறிக்கம்
வழக்கம் இனியுண்டோ?
மனிதர் நோக மனிதர் பார்க்கும்
வாழ்க்கை இனியுண்டோ-புலனில்
வாழ்க்கை இனியுண்டோ?-நம்மி லந்த
வாழ்க்கை இனியுண்டோ?
இனிய பொழில்கள் நெடிய வயல்கள்
எண்ணரும் பெருநாடு;
கனியும் கிழங்கும் தானி யங்களும்
கணக்கின் றித்தரு நாடு-இது
கணக்கின் றித்தரு நாடு-நித்த நித்தம்
கணக்கின் றித்தரு நாடு-வாழ்க! (பாரத)

2. இனியொரு விதிசெய் வோம்-அதை
எந்த நாளும் காப்போம்;
தனியொருவனுக் குணவிலை யெனில்
ஜகத்தினை அழித்திடு வோம்-வாழ்க! (பாரத)

3. எல்லா உயிர்களிலும் நானே யிருக்கிறேன்
என்றுரைத்தான் கண்ண பெருமான்;

எல்லாரும் அமரநிலை எய்தும்நன் முறையை
இந்தியா உலகிற் களிக்கும்-ஆம்
இந்தியா உலகிற் களிக்கும்-ஆம் ஆம்,
இந்தியா உலகிற் களிக்கும்-வாழ்க! (பாரத)

4. எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓரினம்
எல்லாரும் இந்தியா மக்கள்,

எல்லாரும் ஓர்நிறை எல்லாரும் ஓர் விலை
எல்லாரும் இந்நாட்டு மன்னர்-நாம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர்-ஆம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர்-வாழ்க (பாரத)

- ஆசிரியர் :*


13/19